Breaking

Post Top Ad

Your Ad Spot

CM Star Dreams - Youtube

Sunday, June 21, 2020

பாரதிதாசன் கவிதைகள்

பாரதிதாசன்



சிறுத்தையே வெளியே வா


பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா.!


எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்.!  


நம்பினை பகலினை நள்ளிருள் என்றே


சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!


சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!


இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?


கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,


வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?


மொழிப்பற் றெங்கே.? விழிப்புற் றெழுக!


இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு..!


குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?


மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!

நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்.! வாழ்வை யுயர்த்துக.!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!


வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!                

       வாழ்க திராவிட நாடு!

               வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே.   


 - புரட்சிக்கவிஞர்  பாரதிதாசன்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot